×

வேளச்சேரியில் சின்னத்திரை பெண் கலைஞரை தாக்கி 2 பவுன், பணம் திருடிய வேலைக்காரி: 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது

வேளச்சேரி: வேளச்சேரியில் நகை திருடிய வேலைக்காரி 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். ளச்சேரி, சீதாராம் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் லட்சுமிதேவி (72). சின்னத்திரையில் டப்பிங் கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.

இவர், கடந்த 2014ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, 8 சவரன் செயின், 4 சவரன் வளையல் என மொத்தம் 12 சவரன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை வேலைக்காரி திருடி சென்றுவிட்டதாக வேளச்சேரி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், அந்த வேலைக்காரி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்களை கேட்காமல் லட்சுமிதேவி வீட்டு வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து லட்சுமிதேவி வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை. குற்றவாளியை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் வேளச்சேரி வீட்டில் கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகைகளை, புனித தோமையர் மலை காவல்துறை கைரேகை பிரிவின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை ஒப்பிட்டு பார்த்ததில், கடந்த 2014ம் ஆண்டு திருச்சி அருகே ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆதாய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி அருகே லால்குடி தாலுகா, ஆலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காந்தி (64) என்ற பெண்ணின் கைரேகையுடன் ஒத்திருப்பதாக தெரியவந்தது.

போலீசார் விசாரித்ததில், அப்பெண் காந்தி கடந்த மார்ச் 27ம் தேதி நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தலைமறைவாகி இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. வேளச்சேரி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில், அவர் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று மாலை திருப்பூரில் பதுங்கியிருந்த காந்தி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை இன்று காலை வேளச்சேரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர் வேளச்சேரியில் சின்னத்திரை டப்பிங் கலைஞர் வீட்டில் வேலைபார்த்தபோது, அங்கு லட்சுமிதேவியை தாக்கிவிட்டு 12 சவரன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டதாக தெரியவந்தது.

அவரிடம் இருந்து 3 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை வழக்கு தொடர்பாக கிடைத்த கைரேகை பதிவை வைத்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட பெண் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என குறிப்பிடத்தக்கது.

The post வேளச்சேரியில் சின்னத்திரை பெண் கலைஞரை தாக்கி 2 பவுன், பணம் திருடிய வேலைக்காரி: 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது appeared first on Dinakaran.

Tags : Velachery ,Lachery, Sitaram Nagar ,
× RELATED சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய்...